திங்கள், 26 ஜனவரி, 2015

கலித்தொகை இன்பம் (அக்கள்வன் மகன்)




தலைவி!  தோழியைப் பார்த்து! ஒளி செய்யும் வளையலை அணிந்தவளே! இந்தக் கதையைக் கேளடீ!

நாம் மாலை நேரத்தில் தெருவில் மணலால் சிறுவீடு அமைத்து மணல் சோறு சமைத்து விளையாடும்போது, ஒருவன் வந்து நம் மணல் வீட்டைக் காலால் சிதைத்தும் நம் தலையில் சூடி இருந்த பூச்சரங்களைப் பிய்த்துப் போட்டும், நாம் விளையாடிய பந்தினைப் பறித்துக் கொணடும் ஓடியும், நம்மையும் கதறுமாறு! செய்வானே! அந்தக் கட்டுக்கடங்காத பட்டியை உனக்கு நினைவு இருக்கிறாதா? என்று அவனைப் பற்றி நினைவுபடுத்தினாள் தலைவி!

ஆமாம்! தெரியுமே! நினைவு இல்லாமல் போகுமா? அவன் பொல்லாதவன் ஆயிற்றே! எத்தனை முறை நாம் கட்டிய மணல் வீட்டைக் காலால் கலைத்துள்ளான்! நாம் தலையில் சூடி இருந்த பூக்களைப் பறித்துப் பிய்த்தெறிந்துள்ளான். குறும்புக்காரன் அவனை எப்படி மறக்க முடியும்! அவன் பெரியவனான பிறகும் வழியில் நம்மைக் கண்டால் கண் சிமிட்டி, கேலியும் கிண்டலும் செய்வான். அவன் பார்வை பொல்லாத பார்வையாக இருக்குமே! அவன் உம்மைப் பார்த்தானா? எங்கு, எப்போது உம்மைப் பார்த்தான் சொல்லேண்டீ! என்றாள் தோழி.

ஆம்! அவன் ஒருநாள் என்ன செய்தான் தெரியுமா?

என்னடி! அவன் என்ன செய்தான்? சொன்னால் தானே தெரியும்! அவன் மிகக் குறும்புக்காரனாயிற்றே! சொல்லடி சீக்கிரம்! என்றாள் தோழி.

ஒருநாள் யானும் என் அன்னையும் வீடடினுள் இருந்தோம். அன்னை சமையல் செய்து கொண்டிருந்தாள். நான் அம்மாவுக்கு உதவியாக செயல்பட்டுக் கொண்டிருந்தேன்.

ஒருவன் எங்கள் தெருவாயிற்படியில் நின்றுகொண்டு, வீட்டில் இருப்பவர்களே! கொஞ்சம் உண்ண நீர் வேண்டுகிறேன் என்று கூறினான். அதைக் கேட்ட என் தாய், என்னை அழைத்து, சுடர் இழையாய்! யாரோ ஒருவன் உண்ணும் நீா் கேட்கிறான். தகட்டுப் பொன்னால் செய்த கலயத்திலே உள்ள நீரைக் குவளையில் முகந்து சென்று அவனுக்கு வார்த்து வா என்று கூறினாள்.

நான் அவன்தான் வந்திருப்பவன் என்று அறியாமல் நீா் முகந்து கொண்டு போனேன்.

போனேனா !

என்னடி ! அதையே திரும்பத் திரும்பச் சொல்கிறாய் !

போனேன் ! அந்தக் குறும்புக்காரன் ! வளை குலுங்கும் என் முன்னங்கையைப் பற்றி வலித்தான். நான் நடுங்கிவிடடேன். நடுங்கியதும் குரல் எழுப்பி,

அன்னாய் ! இவன் செய்கின்ற காரியத்தை வந்து பார் அம்மா ! என்று கதறினேன்.

அந்தச் சத்தத்தைக் கேட்ட என் தாய் அலறி துடித்து ஓடி வந்தாள். அவன் அவர்களைப் பார்த்தான். பார்த்த உடன் நடுநடுங்கிப் போனான். நானும் அவன் நிலையைக் கண்டு துடித்துப்போனேன். அவன் நிலைமை பரிதாபத்திற்குரியதாக இருந்தது. அவன் பார்வை எம்மிடம் கெஞ்சுவது போலும் பாவமாக இருந்தது. நான் நடந்ததை மறந்தேன்.

என் தாயைப் பாா்த்து அன்னாய் ! இவன் நீா் குடிக்கும்போது விக்கினான் என்றேன்.

அவனைப் பாா்த்து உண்மையறியாத என் தாயாா் உண்மையாகவே கலங்கிய உணர்வோடு அவன் முதுகைத் தடவிக்கொண்டே ஆறுதல் கூறிக்கொண்டு இருந்தாள்.

அப்பொழுது அவள் கடைக்கண்ணால் என்னைக் கொல்வது போலப் பார்த்து மீண்டும் தன் மன மகிழ்ச்சியைத் தரும் கூட்டத்தின் புன்சிரிப்பைத் தந்தான். பாரடீ ! அந்தக் கள்வன் ஆகிய மகன் ! என்றாள்.

கள்வன் ! இழிவுதரத்தக்க துன்பங்களைச் செய்தாலும் கள்ளுண்டு களித்தவர்க்கு மேன்மேலும் விருப்பந்தரும் கள்ளயே போன்றது அவன் குறும்பு!

காதல், மலரைவிட மேன்மையுடையதாகும். அந்த உண்மை அறிந்து அந்த நல்ல பயனைப் பெறக் கூடியவர்கள் உலகத்தில் சிலரே ! கண்பார்வையின் அளவில் பிணங்கி, அவனை விடத் தான் விரைந்து தழுவுதலை விரும்பி, பிணங்கிய நிலையையும் மறந்து கடந்துவிட்டாய் !

நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகைத் தன்மையும் கள்ளுக்கு இல்லை. காமத்திற்குண்டு என்று தலைவியைப் பார்த்துத் தோழி கிண்டல் செய்தாள்.

கலித்தொகை செய்யுள்

சுடர்த்தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும்
மணல்சிற்றில் காலில் சிதையா அடைச்சிய
கோதை பரிந்து, வரிப்பந்து கொண்டோடி
நோதக்க செய்யும் சிறுபட்டி, மேலோர்நாள்,
அன்னையும் யானும் இருந்தேமா, ‘இல்லீரே!
உண்ணுநீர் வேட்டேன்’ என் வந்தாற்கு,
அன்னை

‘அடர்பொன்  சிரகத்தால் வாக்கிச் சுடர்இழாய்!
உண்ணுநீா் ஊட்டிவா’ என்றாள்; என், யானும்
தன்னை அறியாது சென்றேன் மற்று என்னை
வளைமுன்கை பற்றி நலியத், தெருமந் திட்டு
அன்னாய்! இவன்ஒருவன் செய்ததுகாண்!
  ன்றேனா,

அன்னை அலறிப் படர்தரத் தன்னையான்,
‘உண்ணுநீா் விக்கினான்’ என்றேனா அன்னையும்
தன்னைப் புறம்பழித்து நீவ; மற்று என்னைக்
கடைக்கணால் கொல்வான்போல் நோக்கி,
நகைக்கூட்டம்
செய்தான், அக்கள்வன் மகன் !

நன்றி

புலவா் செக. வீராசாமி



1 கருத்து:

  1. அய்யா!
    கற்றறிந்தார் ஏத்தும் கலியிலிருந்து அருமையான சொற்சித்திரம் எளிய இன்றைக்குத் தேவையா தமிழில் இருப்பது பெரும் உதவியாக உள்ளது.
    தங்கள் பணி தொடர்க.
    தங்களைத் தொடர்கிறேன்.
    நன்றி

    பதிலளிநீக்கு